search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி டிரைவர் பலி"

    நெய்வேலி அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் பலியானார். மேலும் படுகாயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு 900-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி நாசமானது.

    இந்த நிலையில் நெய்வேலி அருகே நேற்று முன்தினம் இரவு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் ஒருவர் பலியானார். அதன் விவரம் வருமாறு:-

    நெய்வேலி வடக்குமேலூரை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் சந்தோஷ்குமார் (வயது 47). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார், அவரது மனைவி வளர்மதி, மகள் ஈஸ்வரி, பச்சமுத்து, அவரது மனைவி கல்யாணி ஆகிய 5 பேரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்கனவே மழையால் நனைந்து இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சந்தோஷ்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து அலறினர்.

    இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிசிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது பற்றி அறிந்ததும் வடக்குத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பா.ம.க. முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளருமான கோ.ஜெகன் நேரில் சென்று வீட்டை பார்வையிட்டார். பின்னர், லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்ட கோ.ஜெகன், பசுமை வீடு கட்டித்தரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். நாய் குறுக்கே சென்றதால் இந்த விபரீதம் சம்பவம் நடந்துள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டு தெற்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    வடகரை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது திடீரென ஒரு நாய் குறுக்கே சென்றது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

    கீழே விழுந்த முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல்நிலை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    பண்ருட்டியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    பண்ருட்டி: 

    சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை காமராஜ் நகரில் வசித்து வந்தவர் தியாகு(வயது 33). லாரி டிரைவர். இவர் வேலூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் அவர் ஏறினார்.

    ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தியாகு, வாசலில் நின்று பயணம் செய்துள்ளார். பண்ருட்டி திருவதிகை என்ற இடத்தில் ரெயில் வந்தபோது, நிலைதடுமாறி ரெயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தியாகு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பண்ருட்டி போலீசாரும், கடலூர் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தியாகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கடலூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இரணியலில் இன்று அதிகாலை லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிடைவர் நீரில் மூழ்கி பலியானார்.
    இரணியல்:

    சாமியார்மடத்தை அடுத்த வியனூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது.

    ராஜேசுக்கு சொந்தமான லாரியில் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த சேகர் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். லாரியில் நேற்று ரப்பர் மரத்தடிகள் ஏற்றப்பட்டன.இதனை நெல்லை மாவட்டம் அம்பாச முத்திரம் பகுதிக்கு கொண்டு செல்லும்படி டிரைவர் சேகரிடம், லாரி உரிமையாளர் ராஜேஷ் தெரிவித்தார்.

    இதையடுத்து சேகர், மரத்தடிகள் ஏற்றிய லாரியுடன் வியனூரில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு புறப்பட்டார்.

    தக்கலை-இரணியல் ரோட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் லாரி சென்றது. ஆழ்வார்கோவில் அரசமூட்டு குளம் அருகே வந்தபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறு மாறாக ஓடியது.

    இதில், சாலையின் திருப்பத்தில் இருந்த குளத்திற்குள் லாரி தலை குப்புற கவிழ்ந்தது.

    அதிகாலையில் லாரி குளத்திற்குள் கவிழ்ந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி இரணியல் போலீசாருக்கும், தக்கலை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து குளத்திற்குள் கவிழ்ந்த லாரியை மீட்க முயன்றனர்.

    லாரியில் மரத்தடிகள் இருந்ததால் அதனை உடனடியாக மீட்க முடியவில்லை. இதையடுத்து ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் லாரி மீட்கப்பட்டது. அப்போதுலாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் சேகர் நீரில் மூழ்கி பலியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    லாரி குளத்தில் கவிழ்ந்ததும் அதில் இருந்த மரத்தடிகள் குளத்திற்குள் விழுந்தபோது டிரைவர் சேகர், அதன் இடையே சிக்கி கொண்டதும் இதனால் அவர் குளத்தில் மூழ்கி பலியாகி இருப்பதும் தெரிய வந்தது.

    இதற்கிடையே லாரி குளத்தில் கவிழ்ந்த தகவல் அறிந்து லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் சேகரின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணமாக மீட்கப்பட்ட சேகரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு கூடியிருந்தோர் மனதை உருக்குவதாக இருந்தது.

    பார்வதிபுரம் மேம்பால பணி காரணமாக மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இப்போது தக்கலை- இரணியல் சாலை வழியாக ஆசாரிபள்ளம் சென்று வருகிறது. இதனால் தக்கலை-இரணியல் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும். இன்று அதிகாலையில் இச்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போக்குவரத்து போலீசார் இச்சாலையில் வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். #tamilnews
    வேடசந்தூர் அருகே பழுதாகி நின்றுக் கொண்டிருந்த மினிலாரி மீது கன்டெய்னர் லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேடசந்தூர்:

    மதுரை செல்லூரில் இருந்து சேலத்துக்கு கடலை மிட்டாய் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்றது. மினி லாரியை செல்லூரை சேர்ந்த செல்வக்குமார் (வயது 30) என்பவர் ஓட்டினார். உதவியாளராக விக்னேஷ் (28) என்பவர் உடன் வந்தார். திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென மினிலாரி பழுதாகியது. இதையடுத்து டிரைவர் செல்வக்குமார் மற்றும் உதவியாளர் விக்னேஷ் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு உப்பு ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக பழுதாகி நின்ற மினிலாரி மீது மோதியது.

    மோதிய வேகத்தில் மினிலாரியை சில அடிதூரம் கன்டெய்னர் லாரி இழுத்து சென்றது. இந்த விபத்தில் மினிலாரி பலத்த சேதம் அடைந்தது. மேலும் லாரியில் இருந்த கடலை மிட்டாய் பெட்டிகளும் சிதறின. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட மினிலாரி டிரைவர் செல்வக்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் உதவியாளர் விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான செல்வக்குமாரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகேஷ் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொம்மிடியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவர் மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் நேற்று மாலை கருமேகத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது.

    பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன் (வயது50). லாரி டிரைவர். நேற்று இரவு வீட்டின் அருகே பலத்த மழை பெய்ததால் அங்கப்பன் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

    மழை பெய்து கொண்டிருந்ததால் இரவு 9 மணியளவில் வீட்டிற்குள் உறங்க சென்றார். அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள குடிசை வீட்டில் அவரது மனைவி தூங்கி கொண்டிருந்தார்.

    அங்கப்பன் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த அங்கப்பன் மீது விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவர் வலியால் அலறினார். சுவர் இடிந்த சத்தம் கேட்டதும் அங்கப்பனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவரை மீட்டனர்.

    பலத்த காயம் அடைந்த அங்கப்பனை உடனே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×